செவ்வாய், 30 டிசம்பர், 2008

கர்மேன்...கர்மேன்ன்


பெரும்பாலும் பெயர்கள் நினைவிருப்பதில்லை ...மிக நெருங்கின வட்டம் தவிர. முகமும் குரலும் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.... நினைவடுக்குகளில் இருந்து உருவும்போது. இதெல்லாவற்றையும் விட முன் நிற்பது நிறமும்,வாசமும் விரல்களுமே..பெயரை கேட்டதும் விரல்கள் படம் விரிக்கும் ..பின் முகம் தொடரும். அதென்னவோ கை அசைவுகளையும் கால்களையும் கவனித்தல் சிறு வயதிலிருந்தே பழக்கமாகி விட்டது. இடங்களைகூட இப்படித்தான் நினவு படுத்த முடிகிறது..நிறங்களும் வாசமுமாய்.

முதல்நாள் அழுதபடி பள்ளிக்கு சென்று நாள் முழுதும் அழுது வாந்தி எடுத்து தலை சாய்த்து உறங்கின சிஸ்டர் கஸ்பாரின் மடி வாசம், ஒண்ணாம் கிளாஸ் லோகு டீச்சரின் வழுவழுத்த கருப்பு நிறம், ரெண்டாம் கிளாஸ் ஜெயஸ்ரீ டீச்சரின் நளினமான மெல்லிய, பூ கட்டும் கனகாம்பர விரல்கள்.. பழைய தோழி ராதாவின் தேனில் நனைந்த இஞ்சி குரல், இப்போதான் தெளித்து கோலம் போட்டதுபோல எப்பவும் பளிச்சென துலங்கும் முகம் கொண்ட பத்மாசினியின் (என் முதல் முத்த) வாய் வாசம் ......இப்படி தனி தனியே என் நினைவடுக்குகளில் உறைந்த பெயர்களை தாண்டி...
முகமும், நிறமும், குரலும், விரல்களும்,காலசைவுகளும்,ஏன் வாசமுமாய் கூட நினைவிலிருக்கும் ஒரு பெயர் "கார்மென்"!

சிங்கிஸ் ஐத்மாத்தவ் இன் 'ஜமீலா',ல. ச. ரா வின் 'அபிதா' ...தி ஜா வின் மரப்பசு 'அம்மிணி',மோகமுள் 'கல்பனா' போன்ற திட சித்தம் கொண்டு என்னை மொத்தமாய் அலைகழித்த பெயர் "கார்மென் "

Georges Bizet இன் மிக பிரபலமான French Opera -"Carmen". இன்றளவும் மிகவும் அதிகம் விரும்பி மேடையேற்றப்படும் ஒபேரா -Prosper Merimee இன் நாவலான கார்மென் ஒபேரா வடிவம் எடுத்து 1875 இல் முதல்மேடையேற்றத்தில் "ஒழுக்கங்கெட்ட "ஒபேரா என நிந்திக்கப்பட்டு பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. Bizet உயிரோடிருந்த வரை ஒடுக்கப்பட்ட கார்மென், இன்றைய தேதிக்கு எல்லாராலும் மிகவும் விரும்பப்படுகிற ஒபேரா வாக நிலைத்துவிட்டிருக்கிறது ...கல்லடி வாங்கி பின் காலத்தை வென்று நிலைத்தல் என்பது நல்ல படைப்புக்கு ஒரு நியமம் என்று ஆகி விட்டிருக்கிறது !! நாளடைவில் 1915,1945,1985...என பல வருடங்களில் கார்மென் சினிமா வாக உருப்பெற்று வெளிவந்திருக்கிறது.. 1985 இல் Francesco Rosi யின் direction இல் வெளிவந்த 'கார்மென் ' என்னை சந்தித்தது பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ..

1990 இல் சண்டிகரில் நடந்த பிரெஞ்சு பட விழா வில் முதன்முறையாக 'கார்மென்' ஐ சந்தித்தேன்.. அன்றிரவு..மற்றும் அடுத்தடுத்த இரவுகளில் தூக்கம் தொலைத்து 'கார்மென்' ஐ காதலிக்கத் தொடங்கிவிட்டிருந்தேன் என்னை அறியாமலே..அதன் பின் எங்கு எப்போது வாய்ப்பு கிட்டினாலும் .."கார்மென்..கார்மென்"..!

பிரபல ஒபேரா பாடகரான பிளாசிடோ டோமிங்கோ ( Placido Domingo) கதாநாயகனாகவும் , ஜுலியா மிகேநேஸ் ( Julia Migenes) கதாநாயகியாகவும் நடிக்க ஒரு அற்புதமான அனுபவம்..ஜுலியா ஒரு அனுபவப்பட்ட ஒபேரா பாடகியும் தேர்ந்த ஜிப்சி(flemenco) நடனக்காரியும் என்பது பிறகு தெரியவந்தாலும் அந்த முதல் அனுபவத்தில் நான் மயங்கித்தான் போனேன் ..ஒரு மிகப்பிரபலமான கதா பாத்திரத்தை அதன் முழு வீரியத்தையும் ஆகிருதியையும் உள்வாங்கி தன்னிலைப்படுத்தி பின் முழு வீச்சுடன் அடுத்த நிலைக்கு கொண்டு சேர்த்தல் என்பது அத்தனை எளிதல்ல ...அந்த எள்ளலும் துள்ளலும் கட்டுக்கடங்கா பெண்மையையும் நளினம் தோய்த்து இதைவிட வெளிப்படுத்த முடியுமா யாராலும்?

விழிகளின் பரிகசிப்பை விரல்களில் கொண்டுவருதல் எத்தனை பேருக்கு வசப்பட்டிருக்கிற வித்தை??

கார்மென்இன் குறுக்கு சிரிப்பும் நக்கலும் ,ஆளுமையை அடக்கி அளவெடுக்கும் ஊடுருவும் பார்வையையும் அத்தனை எளிதில் தாண்டி விடக்கூடியதா?

இந்த கண்ணிகளை திறந்து பாருங்கள் ...கார்மென் இன் காதல் உங்களுக்கும் வசப்படும்....!

கடைசி காட்சியில் ..கறுப்பு - சிவப்பு ...உள்ளே - வெளியே ...நாயகன் - வில்லன் .வேடுவன்-மிருகம் ....வேட்டையாடும் மிருகம்....என ஒரு குறியீட்டு வன்மத்துடன் படம் முடிகையில் ....உங்கள் கண் விளிம்பில் ஒரு சிறு அசௌகரியம்.. உணர முடியுமேயானால் ...அது கார்மேன்னுக்கான காதலன்றி வேறென்ன?

khttp://in.youtube.com/watch?v=EYfU4QPwz-4


http://in.youtube.com/watch?v=ljv0zDATu3c


http://in.youtube.com/watch?v=djsuP0uta7s


http://in.youtube.com/watch?v=Pr7CpjKhrxY


http://in.youtube.com/watch?v=7fL3HtDWO3g


திறக்க வில்லையெனில் ..orkut இல் my favoruite video வில் இணைத்துள்ளேன் .. கீழ் இருந்து மேல் வரவும்.

2 கருத்துகள்: