செவ்வாய், 30 டிசம்பர், 2008

கர்மேன்...கர்மேன்ன்


பெரும்பாலும் பெயர்கள் நினைவிருப்பதில்லை ...மிக நெருங்கின வட்டம் தவிர. முகமும் குரலும் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.... நினைவடுக்குகளில் இருந்து உருவும்போது. இதெல்லாவற்றையும் விட முன் நிற்பது நிறமும்,வாசமும் விரல்களுமே..பெயரை கேட்டதும் விரல்கள் படம் விரிக்கும் ..பின் முகம் தொடரும். அதென்னவோ கை அசைவுகளையும் கால்களையும் கவனித்தல் சிறு வயதிலிருந்தே பழக்கமாகி விட்டது. இடங்களைகூட இப்படித்தான் நினவு படுத்த முடிகிறது..நிறங்களும் வாசமுமாய்.

முதல்நாள் அழுதபடி பள்ளிக்கு சென்று நாள் முழுதும் அழுது வாந்தி எடுத்து தலை சாய்த்து உறங்கின சிஸ்டர் கஸ்பாரின் மடி வாசம், ஒண்ணாம் கிளாஸ் லோகு டீச்சரின் வழுவழுத்த கருப்பு நிறம், ரெண்டாம் கிளாஸ் ஜெயஸ்ரீ டீச்சரின் நளினமான மெல்லிய, பூ கட்டும் கனகாம்பர விரல்கள்.. பழைய தோழி ராதாவின் தேனில் நனைந்த இஞ்சி குரல், இப்போதான் தெளித்து கோலம் போட்டதுபோல எப்பவும் பளிச்சென துலங்கும் முகம் கொண்ட பத்மாசினியின் (என் முதல் முத்த) வாய் வாசம் ......இப்படி தனி தனியே என் நினைவடுக்குகளில் உறைந்த பெயர்களை தாண்டி...
முகமும், நிறமும், குரலும், விரல்களும்,காலசைவுகளும்,ஏன் வாசமுமாய் கூட நினைவிலிருக்கும் ஒரு பெயர் "கார்மென்"!

சிங்கிஸ் ஐத்மாத்தவ் இன் 'ஜமீலா',ல. ச. ரா வின் 'அபிதா' ...தி ஜா வின் மரப்பசு 'அம்மிணி',மோகமுள் 'கல்பனா' போன்ற திட சித்தம் கொண்டு என்னை மொத்தமாய் அலைகழித்த பெயர் "கார்மென் "

Georges Bizet இன் மிக பிரபலமான French Opera -"Carmen". இன்றளவும் மிகவும் அதிகம் விரும்பி மேடையேற்றப்படும் ஒபேரா -Prosper Merimee இன் நாவலான கார்மென் ஒபேரா வடிவம் எடுத்து 1875 இல் முதல்மேடையேற்றத்தில் "ஒழுக்கங்கெட்ட "ஒபேரா என நிந்திக்கப்பட்டு பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. Bizet உயிரோடிருந்த வரை ஒடுக்கப்பட்ட கார்மென், இன்றைய தேதிக்கு எல்லாராலும் மிகவும் விரும்பப்படுகிற ஒபேரா வாக நிலைத்துவிட்டிருக்கிறது ...கல்லடி வாங்கி பின் காலத்தை வென்று நிலைத்தல் என்பது நல்ல படைப்புக்கு ஒரு நியமம் என்று ஆகி விட்டிருக்கிறது !! நாளடைவில் 1915,1945,1985...என பல வருடங்களில் கார்மென் சினிமா வாக உருப்பெற்று வெளிவந்திருக்கிறது.. 1985 இல் Francesco Rosi யின் direction இல் வெளிவந்த 'கார்மென் ' என்னை சந்தித்தது பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ..

1990 இல் சண்டிகரில் நடந்த பிரெஞ்சு பட விழா வில் முதன்முறையாக 'கார்மென்' ஐ சந்தித்தேன்.. அன்றிரவு..மற்றும் அடுத்தடுத்த இரவுகளில் தூக்கம் தொலைத்து 'கார்மென்' ஐ காதலிக்கத் தொடங்கிவிட்டிருந்தேன் என்னை அறியாமலே..அதன் பின் எங்கு எப்போது வாய்ப்பு கிட்டினாலும் .."கார்மென்..கார்மென்"..!

பிரபல ஒபேரா பாடகரான பிளாசிடோ டோமிங்கோ ( Placido Domingo) கதாநாயகனாகவும் , ஜுலியா மிகேநேஸ் ( Julia Migenes) கதாநாயகியாகவும் நடிக்க ஒரு அற்புதமான அனுபவம்..ஜுலியா ஒரு அனுபவப்பட்ட ஒபேரா பாடகியும் தேர்ந்த ஜிப்சி(flemenco) நடனக்காரியும் என்பது பிறகு தெரியவந்தாலும் அந்த முதல் அனுபவத்தில் நான் மயங்கித்தான் போனேன் ..ஒரு மிகப்பிரபலமான கதா பாத்திரத்தை அதன் முழு வீரியத்தையும் ஆகிருதியையும் உள்வாங்கி தன்னிலைப்படுத்தி பின் முழு வீச்சுடன் அடுத்த நிலைக்கு கொண்டு சேர்த்தல் என்பது அத்தனை எளிதல்ல ...அந்த எள்ளலும் துள்ளலும் கட்டுக்கடங்கா பெண்மையையும் நளினம் தோய்த்து இதைவிட வெளிப்படுத்த முடியுமா யாராலும்?

விழிகளின் பரிகசிப்பை விரல்களில் கொண்டுவருதல் எத்தனை பேருக்கு வசப்பட்டிருக்கிற வித்தை??

கார்மென்இன் குறுக்கு சிரிப்பும் நக்கலும் ,ஆளுமையை அடக்கி அளவெடுக்கும் ஊடுருவும் பார்வையையும் அத்தனை எளிதில் தாண்டி விடக்கூடியதா?

இந்த கண்ணிகளை திறந்து பாருங்கள் ...கார்மென் இன் காதல் உங்களுக்கும் வசப்படும்....!

கடைசி காட்சியில் ..கறுப்பு - சிவப்பு ...உள்ளே - வெளியே ...நாயகன் - வில்லன் .வேடுவன்-மிருகம் ....வேட்டையாடும் மிருகம்....என ஒரு குறியீட்டு வன்மத்துடன் படம் முடிகையில் ....உங்கள் கண் விளிம்பில் ஒரு சிறு அசௌகரியம்.. உணர முடியுமேயானால் ...அது கார்மேன்னுக்கான காதலன்றி வேறென்ன?

khttp://in.youtube.com/watch?v=EYfU4QPwz-4


http://in.youtube.com/watch?v=ljv0zDATu3c


http://in.youtube.com/watch?v=djsuP0uta7s


http://in.youtube.com/watch?v=Pr7CpjKhrxY


http://in.youtube.com/watch?v=7fL3HtDWO3g


திறக்க வில்லையெனில் ..orkut இல் my favoruite video வில் இணைத்துள்ளேன் .. கீழ் இருந்து மேல் வரவும்.

புதன், 24 டிசம்பர், 2008

அந்நியமாதலின் விகிதங்கள்..

தீபாவளி போனசில் வீட்டுக்கு வந்த கைத்தறி போர்வை அல்லது அம்மாவின் பழைய பட்டுப்புடவை என இந்த மார்கழி குளிருக்கு அடக்கமாய் போர்த்தி கால் குறுக்கி சுருண்டு தூங்கும் அதிகாலை வேளைகளில் அலாரமடிக்க ..மனமில்லாமல் சிணுங்கியபடியே எழுந்து அம்மன் கோயில் பாடல்களுக்கிடையே கிருஸ்துமஸ் எதிர்பார்ப்புகளுடன் அரைப்பரிட்சைக்கு டப்பா அடித்த நாட்கள் கண்முன் வருகின்றன..."புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேவும் ...விநாயகனே வினை தீர்த்தவனேவும்...கற்பூர நாயகியே வும்.. மனதில் சுலபமாய் பதிந்த அளவுக்கு அல்லாமல் அல்ஜீப்ராவும் .. ஆப்டிக்ஸ் உம் ..ஆர்கானிக் கெமிஸ்ட்ரி யும் அன்னியமாயின.. ஐந்தரை மணிக்கு கோனார் சகிதம் வரும் கருப்பு பசுவின் மணியோசை மனதில் அடிக்க ஜன்னலில் முகம் பதியும் ..பால் வாங்க யார் வந்திருப்பது மாமி வீட்டில் இருந்தென...சுதாவோ, கீதாவோ, அன்றைய தினத்தை துவங்கி வைக்க ..பரீட்சை முடிந்த கையோடு..கிருஸ்துமஸ் தயாரிப்புக்கள் தொடங்கி விடும்.. அதிரசத்துக்கு அம்மா மாவு இடித்து பாகு காய்ச்சி வேடு கட்டி வைப்பதிலிருந்து ..முறுக்கு மாவுக்கு மிஷினுக்கு போவது மற்றும் சொமாசுக்கு அச்சு வாங்க ரீட்டா டீச்சர் வீட்டுக்கு போகிற போக்கில் கிரேசி யுடன் உரசுவதும் ...சுகுணன் டெய்லர் கடைக்கு நடையாய் நடந்து "அண்ணா பேன்ட் ரெடியா..பாட்டம் 30 ஆ 32 ஆ" என தொங்குவதுமாய் ...கிருஸ்துமஸ் எதிர்பார்ப்புகள் ....முந்தின இரவே வீட்டில் பலகாரங்களும் புது துணியும் வைத்து ஏறக்குறைய ஹிந்து பழக்க வழக்க ரீதியில் சாமி கும்பிட்டு..நள்ளிரவே சர்ச் சென்று மாஸ் முடிந்த கையோடு தெரிந்த தெரியாத எல்லோரோடும் கை குலுக்கி வாழ்த்து சொல்லி வீட்டுக்கு வந்து அப்பா அம்மா வின் முன் மண்டியிட்டு ஆசீர்வாதமும் பத்து ரூபாயும் வாங்கின கையோடே over exitment இல் தூக்கம் தொலைத்து விடியலுக்கு பட்டாசு வெடிக்க காத்திருந்த கால மெல்லாம் ... அன்னியப்பட்டு...

இப்போது...டெல்லியின் ஆகப் பெரிய கத்தீட்ரல், வீட்டிலிருந்து வெறும் இருநூறு மீட்டெர் தொலைவிலிருந்தாலும் சம்பந்தமே இல்லாமல் இந்த கிருஸ்துமஸ் இரவில் வீட்டில் உட்கார்ந்து blog எழுத முடிகிறது!.. .

போன வருஷம் கிறிஸ்துமஸ் அன்று நான் மற்றும் நண்பன் பல்ஜீத் சிங் (சர்தார்ஜி) இருவரும் ஜமா மஸ்ஜித் சென்று பிரார்த்தித்து வெளியே வந்து பியர் அடித்துவிட்டு நேரே "கரீம்ஸ்" இல் பிரியாணி சாப்பிட்டது தனி கதை!

மத்திய தர கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து கிருஸ்துவ பள்ளிகளில் படித்து வளர்ந்து பதினெட்டு இருபது வயது வரை ஒழுக்கமான கத்தோலிக்க கிறிஸ்துவ பிள்ளையாய் வளர்ந்து..பாவம்.. நரகம் ..ஏவாள் ..விலக்கப்பட்ட கனி ..பிதா சுதன் பரிசுத்த ஆவி ..'கன்னி' மேரியின் 'கந்தர்வ' கருத்தரிப்பு ..இயேசுவின் super star பிம்பங்கள் ..கடைசி தீர்ப்பு நாள் ..மோட்சம்.. என ரோமாபுரி ராஜாவின் (pope ..the ultimate!) பரிவாரங்களின் கற்பனா அதீதங்களில் கட்டுண்டு எப்பவும் பாவியாய் குற்ற உணர்வுடனே வாழ நிர்பந்திக்கப்பட்டு வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் பெற்றோர் உந்தித்தள்ள பாதிரி முன் மண்டியிட்டு "பொய் சொன்னேன் ..கெட்ட வார்த்தை பேசினேன்.. அம்மா அப்பாவை திட்டினேன் ..சினிமா பார்க்க இரண்டு ரூபாய் திருடினேன் " என நாகரீகமான பாவங்களை மட்டும் சொல்லி, செக்ஸ் புத்தகம் படித்து வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி ,பின் எதிர் வீட்டு அக்கா, கணக்கு வாத்தியாரின் புது மனைவி ..இவர்களை நினைத்து கையடித்தது -போன்ற அசல் பாவங்களை(!) ஓரம்கட்டி, பாவ சங்கீர்த்தனம் செய்த இளமைக்காலங்களில் இருந்து விலகி விடை பெற்று கொஞ்சம் சுயமாய் சிந்திக்க முனைந்த நாட்களில்.. தடைகளை எதிர்கொண்டு ..ஆழப்படிந்திருந்த மூளைச்சலவை கோட்பாடுகளை களைந்தெறிந்து ..இயேசு என்கிற மாமனிதனின் உண்மை நிலைப்பாடுகளை அவனின் உணர்வுகளை வெளிப்பாடுகளை இச்சைகளை புரிந்துகொண்ட பின் அவனின் சூப்பர் ஸ்டார் பிம்பத்தின் பின் பொதிந்திருக்கும் வர்த்தக கயவாளித்தனங்களின் சூத்திரம் புரியத்தொடங்கியதும் அன்னியப்படலானேன்..மதத்திலிருந்தும் ...மாதா கோவிலில் இருந்தும்! எனக்குள் இருந்த புதிர் அவிழத்தொடங்கியதும் பெற்றோருக்கு நான் புதிராகத்தொடங்கி விட்டேன்...சர்ச்சுக்கும் சர்க்கசுக்கும் உள்ள ஒற்றுமைகள் புலப்பட "மதம் பிடிக்காமல்" விலகி விட்டேன் என்பதில் இன்று வரை திருப்தி ..

என்னைப் பொருத்தவரை கடவுள் பக்தியும் காமமும் கதவுக்கு உட்புறம் கொண்டாடப்பட வேண்டியவை ..கதவு தாண்டி வெளியில் வந்தால் பின், களியாட்டம் தான்!வெளியில் வந்த எதுவுமே வியாபாரம்.. இவை இரண்டின் வியாபாரமென்பது வேசித்தனம்..கடவுளையோ காதலி யயோ வைத்து பிழைப்பு நடத்துவதை விட கேவலம் வேறு ஏதும் உண்டா? மனைவியை புணர்ந்த அனுபவத்தை மார்கெட்டில் நின்று மார் தட்டி பேச முடியுமா? பின் மதத்தை பற்றி மட்டும் ஏன் ??

MERRY CHRISTMAS!

திங்கள், 22 டிசம்பர், 2008

டெல்லி கோவா டெல்லி..

ஒரு வினோத அனுபவம் கிட்டியது ..இந்த இருபது வருட விமான பயணங்களை விட முற்றிலும் வேறான ஒரு விமான பயண அனுபவம் ..
போன வாரம் MDLR AIRLINES இன் டெல்லி கோவா விமானத்தின் வெள்ளோட்டம் ..அதை புகைப்படம் எடுக்க எனக்கு அழைப்பும் வற்புறுத்தலும் வந்திருந்தது ..சை போய்த்தான் பார்ப்போமே என கிளம்பி போய் ஏறி உட்கார்ந்தபின் உறைத்தது..i am not just a passenger but a part of the crew ..ஏதோ லோக்கல் பஸ்ஸில் கண்டக்டர் குறுக்கும் நெடுக்குமாய் பயணிப்பது போல் நானும் என் கேமராவும் ..விமான பணிப்பெண்களுடன் கடைசி இருக்கைகளில் அமர்ந்து வம்பு பேசி கிண்டலும் கும்மாளமுமாய் பயணித்து கோவா போய் இறங்கி விமானத்தை விட்டு வெளியேறாமலே காக்பிட்டில் பைலட் உடன் அரட்டை அடித்தபடி போட்டோ ஷூட்முடித்து மீண்டும் அதே விமானத்தில் கடைசி சீட் ..சௌம்யா,ஷாலினி, பிரியங்கா உடன் வெட்டி அரட்டை... வேண்டுமென்ற அளவில் ஸ்நாக்ஸ் அண்ட் ட்ரிங்க்ஸ் ..மகளைப்பற்றி அறிந்ததும் சாக்லேட் பெட்டிகள் ...என பயணத்தில் தேனிரவு ஜோடிகளை தவிர ஒருசில சாமானியர்களை சந்திக்க நேர்ந்தது ..அப்படி ஒருசாமானியனாய் வெளி தெரிந்தாலும் சாமானியன் அல்லாதவன் கார்லோஸ் ..முதுகு மூட்டையும் ஒரு கிட்டாரும் மட்டுமே கொண்டு ஆறு மாதங்கள் இந்தியா சுற்ற கிளம்பி வந்திருக்கிறான் ஆஸ்திரேலியா விலிருந்து(அந்நாட்டு பழங்குடி இனத்தவன்!) ..கம்ப்யூட்டர் புலி ..தேடுவதோ இசை ..நம்மூர் கஞ்சா சிவா சாமிகள் போல் சடை முடி ..(bob மர்லே போன்ற தோற்றம்) ..நட்பு உறவாடுகையில் நிறைய பரிமாற்றங்கள்..கடல் இறாலை எப்படி Rum இல் பதனிட்டு சமைப்பது முதல் வோட்காவின் சக சமான்பாடுகள்... மற்றும் புகைத்தல் முதல் புணர்தல் வரை நிறைய பரிமாற்றங்கள்...வாழ்கையில் "புதியன புகுதலில்" நம்பிக்கை உள்ள நண்பர்களுக்கு ..கார்லோசின் ரெசிப்பி ...

கடல் இறால் -1/2 கிலோ
பூண்டு - 50 grams (நசுக்கியது )
மிளகு - 2 table ஸ்பூன் (நசுக்கியது)
Dark Rum-60 ml
கறிவேப்பிலை -20 (சிறுக நறுக்கியது)
செய்முறை : இறாலை கழுவி சுத்தம் செய்து பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கலந்து 30ml Rum இல் ஊறவைக்கவும் (சுமார் 2 மணி நேரம்)
non stick பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணை சேர்த்து உருகும் சமயம் கறிவேப்பிலை மற்றும் மிளகு சேர்த்து 15 ml Rum சேர்த்து கொதிக்கையில் இறாலை சேர்க்கவும்..சுமார் 20 நிமிடங்கள் வெந்ததும் மீதமிருக்கும் ரம் சேர்த்து
இறக்கவும் .லெமன் வேண்டுமெனில் சேர்த்துக்கொள்ளலாம் ...வோட்கா வுக்கு ஏற்ற துணை...

நம்பவும்...இப்போது இதை சமைத்து ருசித்தபடியே தான் எழுதுகிறேன்.. கடலூர் காரனாகிய எனக்கு எறால் சமையல் பால்ய பழக்கம்.. அம்மாவின் எறால் குழம்பு,வறுவல், தொக்கு, பிரியாணி ..மற்றும் பல இறால் பதார்த்தங்களை ருசித்து வளர்ந்தவன் என்றாலும் இந்த எளிமையான ரெசிபி இறாலின் சுய ருசியை முன்னிறுத்துகிற ஒரு தயாரிப்பு..பெரும்பாலும் நம்மூர் அசைவ சமையல்களில் காரமும் மசாலா நெடியும் ருசியும் சற்று தூக்கலாகவே இருப்பது சகஜம் ..
இந்த வகை காண்டினெண்டல் சமையல் சாப்பிட ஒரு மனப்பக்குவம் அவசியம் ..
அதகள எக்கொவும் சௌன்ட்எபெக்டும் ..பிளிரும் BGM மும் துடிக்கும் லிப்ஸ்டிக் உதடுகளும் நெளியும் புருவமும் நீல அல்லது சிவப்பு பில்டர் ஸ்பாட் ஒளியேற்ற அம்மா அல்லது காதலியின் மரணத்துக்கு அழும் தமிழ் கதாநாயகன் போல் இல்லாமல் கண் ததும்பும் ஒரு ஆழ்ந்த பார்வையில் இழப்பின் ஈடு செய்ய இயலாத சோகத்தை சொல்லிப்போகும் தேர்ந்த நடிகனின் நடிப்பு போல (தமிழ் சினிமாவுக்கு இதுவரை கிடைக்காத )ஒரு நுண்ணிய சுவையை இனம் கண்டு எதிர் கொள்கிற மனப்பக்குவம் ...முயற்சித்து பாருங்கள் ருசியின் ரசனை வசப்படும்!

P.S. - "ச்சீ ..சப்புன்னு இருக்குப்பா .." என்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. (God Bless Your Grave!)

சனி, 20 டிசம்பர், 2008

"நோ தங்கமணி ...என்ஜாய்"

ஆயிற்று...இன்று அதி காலை மகளையும் மறுபாதியையும் நெல்லைக்கு ரயிலேற்றிவிட்டு பிளாட்பாரத்தில் துள்ளலும் துடிப்புமாய் ஓடி வந்து காருக்குள் உட்கார்ந்து பெருமூச்சு விட்டதும் மனது லேசாய் நக்கிக்கொண்டது "இந்தா பதினைந்து நாள் விடுதலை உனக்கு" ! டில்லியின் ரசிக்கக்கூடிய இந்த குளிரில் கார் கண்ணாடியை லேசாய் இறக்கிவிட்டபடி காலைப்பனியின் சில்லிப்பை நுகர்ந்தபடியே இண்டியா கேட் வழியாய் வீடு வந்து வழக்கம்போல் டீ குடித்து பேப்பர் படித்து குளித்து கிளம்பி அலுவலகம் போய் ராத்திரி எட்டு மணிக்கு வீடு வந்து காலிங் பெல்லை அழுத்தி விட்டு நிற்கும்போது தான் உரைத்தது!
அடப்பாவி .."நோ தங்கமணி..என்ஜாய்....".
இதோ..வோட்காவும்.. பிஸ்தாவுமாய் இரண்டுலார்ஜ் இறக்கியபடியே எழுதத் துணிந்தாயிற்று !! வீட்டில் தனியே இருக்கும் சுதந்திரம் அலாதி அனுபவம் தான்..எதையும் கழற்றி எங்கேயும் வீசலாம் ..ஷூ வோடே காலைத்தூக்கி சென்டெர் டேபிளில் வைத்த மேனிக்கு ஹாலில் பேப்பர் படிக்கலாம்..முகத்தை அஷ்ட கோணலாக வைத்தபடி முதுகு சொறியலாம்.. பூட்டி வைத்திருந்த XXX சமாச்சாரங்களை தூசி தட்டி "பார்க்கலாம் "..and can blissfully fart wherever and whenever basis..அம்மணமாய் திரியலாம் ..ஆதி மனிதனாய் உணரலாம்!!
குடும்ப வாழ்க்கை என்கிற இந்த சர்க்கஸில் இப்படி ஒரு இடைவெளி மிகவும் அவசியமானது ஆரோக்கியமானதும் என்றே தோன்றுகிறது ..இருவருக்குமே!
மூன்று லார்ஜ் தரும் தெளிவான போதை ஒரு சுகானுபவம் ...தலைக்கு மேல் ஒரு சின்ன ஒளிவட்டமும் லேசான இரண்டு கொம்புகளும் ,முதுகில் துளிர்விட்ட இரண்டு இறக்கைகளும் கூடவே ஒரு குறும்பான vaal முளைத்தது போன்ற ஒருஉணர்வு கிட்டும் இந்த போதை ஒரு கிறக்கம்...சரி என் சுதந்திரத்துக்கு வருவோம் ..சேச்சி கடையிலிருந்து "மூணு பரோட்டேயும் எறச்சி கறியும்" தருவித்தாயிற்று! ரொம்ப நாட்களுக்கு முன் வாங்கி வைத்திருந்த "irreversible" DVD பார்த்துவிடலாம்.. ஆனால் எல்லாம் இருந்தும் இந்த சனிக்கிழமை இரவு அந்நியமாய் தோன்றுகிறது ..தனிமை கழுத்துக்கு பின்னாலிருந்து லேசாய் எட்டிப்பார்க்கத் துவங்கிவிட்டது .....
சில வருடங்கள்முன்பு எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்தில் பொருந்துகிறது ..

தனிமை மிகவும்
அற்புத மானதென நண்பன் சொல்லுவான்
காதலிக்கு கடிதம் எழுத
கம்ப்யூட்டர் அல்லது கம்யூனிச
புத்தகங்கள் வாசிக்க
வாஸ்து சாஸ்திரம் அல்லது
வான்வெளி ஆராய்ச்சி கற்க
சைகொவேச்கியின் nut craker கேட்க
பைபிள் அல்லது பழைய புத்தகங்கள் தேடி துசி தட்ட
த்யானம் செய்ய
தண்ணியடிக்க
கால் நகங்கள் அல்லது கக்கத்து மயிர் களைய
கஞ்சா முயன்றபடி gazal கேட்க
டாலியின் உருகும் கடிகாரங்களில்
அல்லது வாடி உதிரும் வான் கோ வின்
சூரியகாந்தி யில் தொலைய ...
பிராணாயாமம் கற்க
சிகரெட் புகையின் அதிர்வெண் கணக்கிட
மஞ்சளும் நீலமுமாய்
பழுப்பேறிய பழைய கடிதங்களில்
உறைந்திருக்கும் காதலை நுகர ...
மனைவியின் இடுப்பு மடிப்பிடை உருளும்
ஒற்றை வியர்வைத் துளியின்
ருசியை அசை போட ...
இவையன்றி இதுபோல் இன்னும்
என்ன என்னவெல்லாமோ செய்ய வென ..
அது சரி..
இந்த தனிமையை வைத்துக்கொண்டு
நான் தனியாய் என்ன செய்ய?..

சனிக்கிழமை நள்ளிரவுகளில் வீடதிர ஒலிக்கும் மனைவியின் வெடிச் சிரிப்பும் மகளின் நையாண்டி கலாட்டாக்களும் இல்லாமல் இந்த கம்ப்யூட்டர் கீ போர்டு சத்தத்தில் நைந்து உறைகிறது இவ்விரவு ....

மயான அமைதியாய் இருக்கும் இந்த தனிமையை வைத்துக்கொண்டு தனியாய் நான் என்னதான் செய்வது???

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

சுரணை லேகியம் ஏதும் உண்டா?

நாம் எல்லாம் தமிழர்கள் ...அல்லது tamilians....or madrasis!!! ஏதோ ஒரு கழுதை .."கழுதை வெட்டயில் முன் வெட்டைஎன்ன பின் வெட்டை என்ன " என என் மாமனார் ஊரில் ஒரு சொல் உண்டு!
விஷயத்துக்கு வருவோம் ..மும்பையில் ரணகளமாகி மக்கள் மரண பயத்தில் நடுங்கின நேரத்திலும் நம்மவர்கள் சரவணபவனில் தயிர்வடை சாப்பிட்டுக்கொண்டே THE HINDU வில் ஏப்பம் விட்ட படி "it's very bad ...what is happening in this country?? என்ன சார் மனுஷாள் உயிருக்கு காபந்து இல்லே.. இந்த தேசத்துலே.. what protection this country is givin to its citizens??!!" அதோடு சரி. இருக்கவே இருக்கிறது அசத்தபோவது யாரும் மற்றும் மிட் நைட் மலங்களும்...
கூடவே சேர்ந்து கொண்டது தொடர் மழை ..யாருக்கும் அவர் அவர் குண்டி நனைவது தவிர வேறேதும் கவலைக்குரியதாயில்லை!! அதே நாட்களில்
என் அப்பா கடலூரில் திருவந்திபுரம் போகும் வழியில் மலை அடிவாரத்தில் 15 லட்சத்தில் கட்டி முடித்த என் தம்பியின் மாடி வீட்டின் மார்பில் தரையில் சுகமாய் உட்கார்ந்து கொண்டு மும்பை கலவரங்களின் எந்த பாதிப்பும் இன்றி என்னோடு போனில் கோபிக்கிறார் "இவ்வளோ மழை பெய்யுதே என்ன ஆச்சு ..எப்படி இருக்கீங்க ன்னு ஒரு விசாரிப்பு உண்டா?"
ஆக மொத்தம் ஒரு உண்மை புரிகிறது.. இரண்டாம் உலக போர் முதல் கார்கில் வரை தமிழன் வாழ்க்கை எந்த தவிப்பும் தடங்கலும் இன்றி சுகமாய் புசித்தலும் புணர்வதுமாய் அவனை வைத்திருக்கிறது! இதே குண்டு வெடிப்புகள் /துப்பாக்கி சூடுகள் சென்னை சென்ட்ரல் அல்லது எக்மோர் ஸ்டேஷன் மற்றும் ரங்கநாதன் தெருவிலோ நடந்திருந்தால் எத்தனை களேபரமாகி இருக்கும்?? தமிழ் குடிமகன்கள் இவற்றை எல்லாம் "சங்கர் சார் ,Moneyரத்னம்சார் " படங்களில் பார்த்ததோடு சரி அதனால் தான் ஈழ தமிழர்க்கு ஒப்பாரி கவிதை பாட முடிகிறது!!
இன்று star movies இல் "HOLI SMOKE" என்றொரு படம் பார்க்க நேர்ந்தது ...இந்திய உடை இந்து கலாச்சாரம் இந்து கடவுள்கள் சாமியார்கள் என எல்லோரையும் தரம் தாழ்த்தி போகிற போக்கில் இந்திய பெருமை பேசுகிற படம் என ஒரு பிரம்மை உண்டாக்குகிற படம்..அச்சு அசல் நம்ம "moneyரத்னம் சார் " பண்ணின ரோஜா, பாம்பே, உயிரே போன்ற , கயவாளித்தனம் வெளித்தெரியாமல் வியாபார புத்திசாலிமேல் பூச்சுடன் பண்ணப்பட்ட "சமூக அக்கறை" உள்ள படங்கள் போன்றது!
இன்னமும் டிசம்பர் மாதத்தில் மங்கி குல்லாவும் மடித்து கட்டின வேட்டியுமாய் கரோல் பாக் மார்க்கெட்டில் "இங்லீசில்"பேரம் பேசும் தமிழ் குடிமகன்களை பார்க்க நேரிடுகிறது!!
என் பொண்ணு மகள் சமீபமாய் தமிழ் டிவி பார்த்து கற்றுக்கொண்ட வார்த்தைகள்....."முடிச்சவிக்கி..,மொள்ளமாரி..பேமானி ..கேப்மாரி!"
வாழ்க தமிழ்!

கவிதை இப்போது நேர்ந்திருக்கிறது ...நான்கு வருடங்களாய் எழுதாமல் இருந்ததில் வருத்தங்கள் ஏதுமில்லை..நண்பர்கள் சந்தோஷிக்கலாம் ..இதோ..

வார்த்தையின் உச்சரிப்புக்கும்

அதன்

பொருளுக்குமான நெருக்கம்

அல்லது

இடைவெளியில்

நிர்ணயிக்கப்படுகிறது

உதிர்த்தவன் சார்ந்த

நிலைப்பாடுகள் மற்றும்

விமர்சனங்கள்...

வேசியா வெறும்பயலா வென

அலசி துவைத்து கிழித்து

காயப்போட்ட கையோடு

வாழ்க்கை

குறி பொத்தி அலைகிறது

wrinkle free

கோமணம் தேடி.