புதன், 24 டிசம்பர், 2008

அந்நியமாதலின் விகிதங்கள்..

தீபாவளி போனசில் வீட்டுக்கு வந்த கைத்தறி போர்வை அல்லது அம்மாவின் பழைய பட்டுப்புடவை என இந்த மார்கழி குளிருக்கு அடக்கமாய் போர்த்தி கால் குறுக்கி சுருண்டு தூங்கும் அதிகாலை வேளைகளில் அலாரமடிக்க ..மனமில்லாமல் சிணுங்கியபடியே எழுந்து அம்மன் கோயில் பாடல்களுக்கிடையே கிருஸ்துமஸ் எதிர்பார்ப்புகளுடன் அரைப்பரிட்சைக்கு டப்பா அடித்த நாட்கள் கண்முன் வருகின்றன..."புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேவும் ...விநாயகனே வினை தீர்த்தவனேவும்...கற்பூர நாயகியே வும்.. மனதில் சுலபமாய் பதிந்த அளவுக்கு அல்லாமல் அல்ஜீப்ராவும் .. ஆப்டிக்ஸ் உம் ..ஆர்கானிக் கெமிஸ்ட்ரி யும் அன்னியமாயின.. ஐந்தரை மணிக்கு கோனார் சகிதம் வரும் கருப்பு பசுவின் மணியோசை மனதில் அடிக்க ஜன்னலில் முகம் பதியும் ..பால் வாங்க யார் வந்திருப்பது மாமி வீட்டில் இருந்தென...சுதாவோ, கீதாவோ, அன்றைய தினத்தை துவங்கி வைக்க ..பரீட்சை முடிந்த கையோடு..கிருஸ்துமஸ் தயாரிப்புக்கள் தொடங்கி விடும்.. அதிரசத்துக்கு அம்மா மாவு இடித்து பாகு காய்ச்சி வேடு கட்டி வைப்பதிலிருந்து ..முறுக்கு மாவுக்கு மிஷினுக்கு போவது மற்றும் சொமாசுக்கு அச்சு வாங்க ரீட்டா டீச்சர் வீட்டுக்கு போகிற போக்கில் கிரேசி யுடன் உரசுவதும் ...சுகுணன் டெய்லர் கடைக்கு நடையாய் நடந்து "அண்ணா பேன்ட் ரெடியா..பாட்டம் 30 ஆ 32 ஆ" என தொங்குவதுமாய் ...கிருஸ்துமஸ் எதிர்பார்ப்புகள் ....முந்தின இரவே வீட்டில் பலகாரங்களும் புது துணியும் வைத்து ஏறக்குறைய ஹிந்து பழக்க வழக்க ரீதியில் சாமி கும்பிட்டு..நள்ளிரவே சர்ச் சென்று மாஸ் முடிந்த கையோடு தெரிந்த தெரியாத எல்லோரோடும் கை குலுக்கி வாழ்த்து சொல்லி வீட்டுக்கு வந்து அப்பா அம்மா வின் முன் மண்டியிட்டு ஆசீர்வாதமும் பத்து ரூபாயும் வாங்கின கையோடே over exitment இல் தூக்கம் தொலைத்து விடியலுக்கு பட்டாசு வெடிக்க காத்திருந்த கால மெல்லாம் ... அன்னியப்பட்டு...

இப்போது...டெல்லியின் ஆகப் பெரிய கத்தீட்ரல், வீட்டிலிருந்து வெறும் இருநூறு மீட்டெர் தொலைவிலிருந்தாலும் சம்பந்தமே இல்லாமல் இந்த கிருஸ்துமஸ் இரவில் வீட்டில் உட்கார்ந்து blog எழுத முடிகிறது!.. .

போன வருஷம் கிறிஸ்துமஸ் அன்று நான் மற்றும் நண்பன் பல்ஜீத் சிங் (சர்தார்ஜி) இருவரும் ஜமா மஸ்ஜித் சென்று பிரார்த்தித்து வெளியே வந்து பியர் அடித்துவிட்டு நேரே "கரீம்ஸ்" இல் பிரியாணி சாப்பிட்டது தனி கதை!

மத்திய தர கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து கிருஸ்துவ பள்ளிகளில் படித்து வளர்ந்து பதினெட்டு இருபது வயது வரை ஒழுக்கமான கத்தோலிக்க கிறிஸ்துவ பிள்ளையாய் வளர்ந்து..பாவம்.. நரகம் ..ஏவாள் ..விலக்கப்பட்ட கனி ..பிதா சுதன் பரிசுத்த ஆவி ..'கன்னி' மேரியின் 'கந்தர்வ' கருத்தரிப்பு ..இயேசுவின் super star பிம்பங்கள் ..கடைசி தீர்ப்பு நாள் ..மோட்சம்.. என ரோமாபுரி ராஜாவின் (pope ..the ultimate!) பரிவாரங்களின் கற்பனா அதீதங்களில் கட்டுண்டு எப்பவும் பாவியாய் குற்ற உணர்வுடனே வாழ நிர்பந்திக்கப்பட்டு வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் பெற்றோர் உந்தித்தள்ள பாதிரி முன் மண்டியிட்டு "பொய் சொன்னேன் ..கெட்ட வார்த்தை பேசினேன்.. அம்மா அப்பாவை திட்டினேன் ..சினிமா பார்க்க இரண்டு ரூபாய் திருடினேன் " என நாகரீகமான பாவங்களை மட்டும் சொல்லி, செக்ஸ் புத்தகம் படித்து வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி ,பின் எதிர் வீட்டு அக்கா, கணக்கு வாத்தியாரின் புது மனைவி ..இவர்களை நினைத்து கையடித்தது -போன்ற அசல் பாவங்களை(!) ஓரம்கட்டி, பாவ சங்கீர்த்தனம் செய்த இளமைக்காலங்களில் இருந்து விலகி விடை பெற்று கொஞ்சம் சுயமாய் சிந்திக்க முனைந்த நாட்களில்.. தடைகளை எதிர்கொண்டு ..ஆழப்படிந்திருந்த மூளைச்சலவை கோட்பாடுகளை களைந்தெறிந்து ..இயேசு என்கிற மாமனிதனின் உண்மை நிலைப்பாடுகளை அவனின் உணர்வுகளை வெளிப்பாடுகளை இச்சைகளை புரிந்துகொண்ட பின் அவனின் சூப்பர் ஸ்டார் பிம்பத்தின் பின் பொதிந்திருக்கும் வர்த்தக கயவாளித்தனங்களின் சூத்திரம் புரியத்தொடங்கியதும் அன்னியப்படலானேன்..மதத்திலிருந்தும் ...மாதா கோவிலில் இருந்தும்! எனக்குள் இருந்த புதிர் அவிழத்தொடங்கியதும் பெற்றோருக்கு நான் புதிராகத்தொடங்கி விட்டேன்...சர்ச்சுக்கும் சர்க்கசுக்கும் உள்ள ஒற்றுமைகள் புலப்பட "மதம் பிடிக்காமல்" விலகி விட்டேன் என்பதில் இன்று வரை திருப்தி ..

என்னைப் பொருத்தவரை கடவுள் பக்தியும் காமமும் கதவுக்கு உட்புறம் கொண்டாடப்பட வேண்டியவை ..கதவு தாண்டி வெளியில் வந்தால் பின், களியாட்டம் தான்!வெளியில் வந்த எதுவுமே வியாபாரம்.. இவை இரண்டின் வியாபாரமென்பது வேசித்தனம்..கடவுளையோ காதலி யயோ வைத்து பிழைப்பு நடத்துவதை விட கேவலம் வேறு ஏதும் உண்டா? மனைவியை புணர்ந்த அனுபவத்தை மார்கெட்டில் நின்று மார் தட்டி பேச முடியுமா? பின் மதத்தை பற்றி மட்டும் ஏன் ??

MERRY CHRISTMAS!

4 கருத்துகள்:

  1. நான் அடிக்கடி நினைப்பது உண்டு ,எதனால் இப்படி கடவுள் வருகிறார் ,இருக்கிறார் என மலிவான விளம்பரங்கள் என , மிகவும் மதிக்கும் ,நேசிக்கும் விஷயங்களை பிறரிடம் முழுமையாக பகிர்ந்து கொள்ள தோன்றுவதில்லை . சுரேஷ் உங்களின் எழுத்துக்கள் அன்றைய பாலகுமார் எழுத்துக்களை போல் நிதர்சன தரிசனம் தருகிறது .வயதான பின் சாமியார் வேஷம் போடா சுரேஷ் ஒன்றும் பாலகுமார் அல்ல ....அப்படித்தானே !keep it up man!

    பதிலளிநீக்கு
  2. மெல்ல ஆரம்பித்து ஆரவாரமாக ஆர்ப்பரித்து பின் ஆழமான அமைதிக்கு திரும்பிய கடல் அலையைப் போலிருந்தது உங்களின் இப்பதிவு. சிறு வயதின் ஞாபகங்களைச் சுமந்து, வளர்பருவத்தின் ரகசிய கனாக்களைக் கடந்து, நிதர்சனத்தின் கதவுகள் உங்களுக்காக திறந்திருக்கின்றது சுரேஷ். தெளிவான நடை, excellant narration...வெளிப்ப்டையாக நான் இவ்வாறு எனக்கு இது பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு மனத் திடம் வேண்டும்.இப்படியே இருங்கள்..தொடர்ந்து எழுதுங்கள்...கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. // எப்பவும் பாவியாய் குற்ற உணர்வுடனே வாழ நிர்பந்திக்கப்பட்டு //
    மிகவும் அருமை சுரேஷ்.. நான் கூட இதை பலமுறை யோசித்து இருக்கிறேன். நான் கிறிஸ்தவம் சார்ந்து இல்லாததால் எனக்கு புரியவில்லை. ஏன் எப்போதும், பாவி, ஆவி, துக்கம் சந்தோஷமாக மாறும், கவலை படாதே நான் உன்னோடு இருக்கிறேன், ஊமைகள் பாக்கியவான்கள் என்று வசனங்கள் பெரும்பாலும் எதிர்மறையான விஷயத்தை சொல்லி பிறகு நல்ல விஷயத்தை சொல்ல்கிறது. புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு இரண்டையும் முழுதும் படித்து பல முறை யோசித்திருக்கிறேன். பதிவு என்பது உண்மையில் வாழ்வின் பக்கங்களை பதிவு செய்வதுதான் என நிருபித்து இருக்கீர்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு புரிதலை பகிர்ந்துள்ளீர்கள்.. எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் ஏற்படும் விழிப்புதானோன்னு தோணுது..

    நானும் இதே மாதிரி வளர்க்கப்பட்டு ஏகப்பட்ட கேள்விகளோடு புரிந்தேன்...

    நல்ல சுவாரஸ்யமான எழுத்து தங்களது...

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு