வெள்ளி, 18 மார்ச், 2011


ரெண்டாங்க்ளாஸ்
டீச்சர் பையன் என்கிற
அங்கீகாரத்தால்
எப்போது நினைத்தாலும்
எந்திரிக்க முடிந்தது
ஒன்னுக்கு
போகவென...எனினும்
வாய்ப்பாடு தள்ளாடுகையில்
முன்னங்கால்களை முத்தமிட்டது
முற்றத்து ஈசி சேர் உருளை..
ஆறாவது 'டி ' சார் மகனென
அறியப்பட்டதில் கிடைத்தவை
கிளி கொத்தாத வாதாம்
பழங்கள் மற்றும்
சேமியா ஐஸ் ...
கசகசா,கமர்கட்
கண்டிப்பான எதிர்
அணியாயினும்
எப்போதேனும் வாய்க்கும்
டவுசர் ஜேபியில்
ரகசியமாய்....எனினும்
வாத்தியார் மகனாய்
இழந்தது அதிகம்
வாழ்ந்ததை காட்டிலும் ...
கடலூர் தாண்டி
தீபா புருஷன் என தில்லியில்
எல்லைகள்
வகுக்கப்பட்டு கழுத்தில் மணி
கட்டிய சேவலாய்
கொக்கரிப்புகள் என்னவோ
ஏராளம் தான்!
இதனிடையே பிராயத்தில் இருக்கும்
ஒற்றை மகளின்
அப்பனாய் அவ்விதிகளுக்கு உட்பட்டு
"e " மெயில் facebook .. இத்யாதிகளில்
"அடக்கி வாசிக்க "
அறிவுறுத்தப்பட்டு
எப்படியேனும் எனக்கான நாளையை
அல்பச்சினோ, அபிதா பர்வீன்
அல்லது வண்ணதாசனின்
வீச்சில் வரையறுக்க முயல்கையில்
முதுகு தொட்டு
திரும்ப வைக்கும்
தண்ணி.. தம்.. தொடாத
நண்பனின் மாரடைப்பு ...
பெற்றதும் இழந்த வற்றுக்குமான
சமன்பாடுகள் கேள்விக்குறிகளாய்
எப்போதும் போல் !!

வெள்ளி, 11 மார்ச், 2011

மகரந்த மரம்

மல்லாந்து
சரிகையில்
ஒரு மரமாகத்
தான் இருந்தாய்
மடி புகுந்த என்
சுவாசங்கள் மலர்த்தியதில்
ஒரு மலராக
மலர்ந்த அத்
தருணத்தின்
உன்னத விகர்சிப்பின்
ஒற்றை வெளிப்பாடாய்
சிறகு முளைத்து
படபடத்த
என் இளமை -
இன்றும் நீ
மலர்ந்து விரியும்
தருணங்களின்
சுகந்த ஆகர்ஷிப்புக்கு ஆயத்தமாய்
தவமிருக்கும் சாமுராயின்
ஒற்றை வாள்
வீச்சாய்...
மலர்ந்து
சிரிக்கையில்
வேறெப்போதும் போலில்லாமல் நீ
ஒரு மலராகிறதை
தரிசிக்க...திங்கள், 7 மார்ச், 2011

பொம்மை பிராயம்


அடம்பிடித்து அழுது வாங்கிய
மிட்டாய் கலரில் வெள்ளி பூசி
சிரிக்காமல் நிற்கும் திருவிழா பொம்மை
சாவி முடுக்கில் உயிர்த்தெழுந்து
முன்நகரும்
பீரங்கி சுல்தான்...
பின்னர் வந்த
சிரிக்கும் பொம்மைகள்
சிங்கப்பூர் பொம்மைகள்
பேட்டரி போட்டு பொத்தான்
அமுக்க கை கால் அசைத்து
கவனம் ஈர்க்கும்
பொம்மைகள் எட்டாம் வகுப்பு
முழு பரீட்சை லீவில்
துபாய் மாமா வீட்டு
பொம்மை
பள்ளி இறுதியில் கவனம் சிதைத்த
பொம்மை
போன வந்த இடமெல்லாம் இடற
வாய்த்த பொம்மைகள்
மடிக்கணினி சொடுக்ககளில்
சொக்கி முனகும் பொம்மைகள்
வார இறுதிகளில் வழி மறித்து இளிக்கும்
'e' பொம்மைகள் ...
வெளிநாடுகளில் வேண்டிசென்று
வாங்கிய
அவிழ்க்கும் பொம்மைகள்
அதட்டும் பொம்மைகள்
மேல் படரும்பொம்மைகள்
மேட்டுக்குடி பொம்மைகள்
வாழ்கையை தேடி அலைகையில்
வழிமறித்து நின்ற பொம்மைகள்
இது போதுமென நின்று
நிதானிக்கையில்
நிதர்சனம் உணர்த்திய பொம்மைகள்
என வாய்த்த படி வாழ்ந்தாலும்
மனசருகில் மருகி நிற்கும்
மரப்பாச்சி வாசம்
நிர்வாணமாய்!