ஞாயிறு, 12 ஜூலை, 2009

நானும் அபியும்


.... ஒரு பிள்ளை.. அதுவும் பெண்பிள்ளையாய் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் ...வீடே கோலாகலமாய் தான் இருக்கும் ,பண்டிகை அல்லாத நாட்களிலும்..வேண்டி விரும்பி பெற்ற பெண் குழந்தையை பார்த்து பார்த்து வளர்த்து ..பிறந்த மறுநாள் லாவகமாய் நகம் வெட்டி (இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் என் பொக்கிஷங்களில் ஒன்று !) பின் ..."அப்பா ஆயிடுச்சி ..கழுவி விடு "..க்கு காத்திருந்து கழுவி விட்டு .. குளிப்பாட்டி...நெஞ்சில் தூங்க வைத்து.. அவளின் ஒவ்வொரு "அப்பா ப்ளீஸ் ப்பா.." வுக்கும் பெண்டாட்டியிடம் வாதாடி சண்டையிட்டு ,வாங்கி கட்டிக்கொண்டாலும் ...நெஞ்சு நிமிர்த்தி சந்தோஷப்பட்டு.. ஒண்ணாம் கிளாஸ் முதல் இன்றைய ஏழாம் கிளாஸ் வரை கூடவே பயணப்படுவதில் நான் மறுபடியும் திருந்தி வளர்ந்து ....இன்றைக்கு நல்ல சானிடரி நாப்கின் முதல் புஷ்ஷின் மேல் எறியப்பட்ட ஷூவின் பின்னணியில் பொதிந்திருக்கும் அடக்கிவைக்கப்பட்ட ஆற்றாமையின் நியாயம் வரை சரிக்கு சரியாய் வாதிட முடிகிற மகளுக்கு தகப்பனாய் இருக்கிற பெருமை அலாதி சுகம்.. இந்த தருணத்தில் தான் திருட்டு வி சி டி யில் "அபியும் நானும் " படம் பார்க்க நேர்ந்தது ..அட ,நம்ம வீட்டு கதை ...
draft
1/9/08
இதை எழுதி ஏறக்குறைய பத்து மாதங்கள் ஆயிற்று (ஒரு பிரசவ காலம் !) மகளும் எட்டாம் வகுப்புக்கு வந்தாயிற்று..ஆனாலும் மகளின் இந்த ஒருவருட வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது ..ஒபாமா பதவி ஏற்று,எகானமி மெல்ட் டவுன் முகத்தில் அறைந்து,புலிகள் அழிக்கப்பட்டு, பிரபாகரன் இறந்ததாய் சொல்லப்பட்டு ...என்று ஏதேதோ நிகழ்ந்து ஆயிற்று ... வேலை விஷயமாய் மும்பை போயிருந்த சமயம் ஒரு மாலை ஆறு மணிக்கு மனைவியின் போன் ..."நீங்க கேளுங்கப்பா..." என்று ஆரம்பித்தது ...மகளுக்கு ஷிம்மிஸ் வாங்க கடைக்கு போன இடத்தில் அம்மைக்கும் மகளுக்கும் பிணக்கு!ஸ்போர்ட்ஸ் பிரா வேண்டுமென்று மகளும் இப்பவே அவசியமா என்று அம்மையும் சற்றேறக்குறைய சண்டை ...

முடிவாக, "நீங்க கேளுங்கப்பா..."!மகளுக்கு முதல் பிரா வாங்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற தகப்பன்கள் பாக்கிய சாலிகள்! "அப்பா...ஒன்னுமில்லப்பா.. " என்று மருகி சிணுங்கிய பிள்ளைக்கு தெளிவாய் மார்பளவுக்கும் பிரா அளவுக்கும் வித்தியாசம் தெரியப்படுத்தி உள்ளாடைகள் எப்பவும் சௌகரியமாய் இருக்கவேண்டிய அவசியத்தையும் உணர்த்தி "நா எந்த ஸ்போர்ட்ஸ் பிராவை கண்டேன் " என்ற மனைவியையும் சமாதானப் படுத்தி வாங்க வைத்த தருணம் உன்னதமானது! (அன்று பாரில் கூடுதலாக "ஒரு லார்ஜ்" கொண்டாடப்பட்டது உபரி தகவல்!)

சரி, படத்துக்கு வருவோம்..நல்ல படம்.. மகளுக்கும் தகப்பனுக்குமான உறவை கவிதையாய் சொல்ல முயற்சித்த படம்.. (கூத்துப்பட்டறையில் பசுபதி, கலைராணி யோடு பரிச்சயமானபோது குமார வேலுவுடனும் "ஒட்டு தம்" அடித்த நினைவுகளில் என் பிளாஷ் பேக்) பயித்தியமாய் குமாரவேலு வந்து அடுத்த நிலைக்கு துள்ளிஏறிய படம் ,"சர்தார்" வந்ததும் கொஞ்சம் சொதப்பலாயிற்று... அதிலும் சர்தாரை சுற்றியுள்ள எல்லோருக்கும் ஒரு நெஞ்சை நக்கும் பிளாஷ் பேக் என நொண்டி அடிக்க வேண்டிய கட்டாயம் ஏன்?சூப்பர் ஹீரோ மனநிலையிலிருந்து நாம் எப்போ விடுபட போகிறோம்? எல்லா கதைக்கும் ஏன் ஒரு நாயகனோ/ நாயகியோ கட்டாயமாகிறார்கள்? அவர்களை சராசரி மனிதர்களிடமிருந்து பிடுங்கி எங்கோ உச்சத்தில் கொண்டு ஏன் செருகுகிறோம்? என்றெல்லாம் கேள்விகள் முளைக்கலாயின.. சராசரி வாழ்க்கைக்கான நிஜ விமர்சனம் கொண்ட படங்களை நாம் தேட வேண்டிய கட்டாயம் இப்போது..

இந்த பத்து மாத இடைவெளியில் சுப்ரமணியபுரம், பூ, வெண்ணிலா கபடிகுழு, என படங்கள் வந்து ஒரு நம்பிக்கை தோய்ந்த சந்தோஷத்தை கொடுத்தது உண்மை!!ஆனால் கூடவே "தசாவதார "பெருவியாதிகள் எப்போது தீரும் என்கிற ஆதங்கமும்! ""அள்ளி அள்ளி கொடுத்தேனே காந்தா?""!!