வெள்ளி, 18 மார்ச், 2011


ரெண்டாங்க்ளாஸ்
டீச்சர் பையன் என்கிற
அங்கீகாரத்தால்
எப்போது நினைத்தாலும்
எந்திரிக்க முடிந்தது
ஒன்னுக்கு
போகவென...எனினும்
வாய்ப்பாடு தள்ளாடுகையில்
முன்னங்கால்களை முத்தமிட்டது
முற்றத்து ஈசி சேர் உருளை..
ஆறாவது 'டி ' சார் மகனென
அறியப்பட்டதில் கிடைத்தவை
கிளி கொத்தாத வாதாம்
பழங்கள் மற்றும்
சேமியா ஐஸ் ...
கசகசா,கமர்கட்
கண்டிப்பான எதிர்
அணியாயினும்
எப்போதேனும் வாய்க்கும்
டவுசர் ஜேபியில்
ரகசியமாய்....எனினும்
வாத்தியார் மகனாய்
இழந்தது அதிகம்
வாழ்ந்ததை காட்டிலும் ...
கடலூர் தாண்டி
தீபா புருஷன் என தில்லியில்
எல்லைகள்
வகுக்கப்பட்டு கழுத்தில் மணி
கட்டிய சேவலாய்
கொக்கரிப்புகள் என்னவோ
ஏராளம் தான்!
இதனிடையே பிராயத்தில் இருக்கும்
ஒற்றை மகளின்
அப்பனாய் அவ்விதிகளுக்கு உட்பட்டு
"e " மெயில் facebook .. இத்யாதிகளில்
"அடக்கி வாசிக்க "
அறிவுறுத்தப்பட்டு
எப்படியேனும் எனக்கான நாளையை
அல்பச்சினோ, அபிதா பர்வீன்
அல்லது வண்ணதாசனின்
வீச்சில் வரையறுக்க முயல்கையில்
முதுகு தொட்டு
திரும்ப வைக்கும்
தண்ணி.. தம்.. தொடாத
நண்பனின் மாரடைப்பு ...
பெற்றதும் இழந்த வற்றுக்குமான
சமன்பாடுகள் கேள்விக்குறிகளாய்
எப்போதும் போல் !!

வெள்ளி, 11 மார்ச், 2011

மகரந்த மரம்

மல்லாந்து
சரிகையில்
ஒரு மரமாகத்
தான் இருந்தாய்
மடி புகுந்த என்
சுவாசங்கள் மலர்த்தியதில்
ஒரு மலராக
மலர்ந்த அத்
தருணத்தின்
உன்னத விகர்சிப்பின்
ஒற்றை வெளிப்பாடாய்
சிறகு முளைத்து
படபடத்த
என் இளமை -
இன்றும் நீ
மலர்ந்து விரியும்
தருணங்களின்
சுகந்த ஆகர்ஷிப்புக்கு ஆயத்தமாய்
தவமிருக்கும் சாமுராயின்
ஒற்றை வாள்
வீச்சாய்...
மலர்ந்து
சிரிக்கையில்
வேறெப்போதும் போலில்லாமல் நீ
ஒரு மலராகிறதை
தரிசிக்க...திங்கள், 7 மார்ச், 2011

பொம்மை பிராயம்


அடம்பிடித்து அழுது வாங்கிய
மிட்டாய் கலரில் வெள்ளி பூசி
சிரிக்காமல் நிற்கும் திருவிழா பொம்மை
சாவி முடுக்கில் உயிர்த்தெழுந்து
முன்நகரும்
பீரங்கி சுல்தான்...
பின்னர் வந்த
சிரிக்கும் பொம்மைகள்
சிங்கப்பூர் பொம்மைகள்
பேட்டரி போட்டு பொத்தான்
அமுக்க கை கால் அசைத்து
கவனம் ஈர்க்கும்
பொம்மைகள் எட்டாம் வகுப்பு
முழு பரீட்சை லீவில்
துபாய் மாமா வீட்டு
பொம்மை
பள்ளி இறுதியில் கவனம் சிதைத்த
பொம்மை
போன வந்த இடமெல்லாம் இடற
வாய்த்த பொம்மைகள்
மடிக்கணினி சொடுக்ககளில்
சொக்கி முனகும் பொம்மைகள்
வார இறுதிகளில் வழி மறித்து இளிக்கும்
'e' பொம்மைகள் ...
வெளிநாடுகளில் வேண்டிசென்று
வாங்கிய
அவிழ்க்கும் பொம்மைகள்
அதட்டும் பொம்மைகள்
மேல் படரும்பொம்மைகள்
மேட்டுக்குடி பொம்மைகள்
வாழ்கையை தேடி அலைகையில்
வழிமறித்து நின்ற பொம்மைகள்
இது போதுமென நின்று
நிதானிக்கையில்
நிதர்சனம் உணர்த்திய பொம்மைகள்
என வாய்த்த படி வாழ்ந்தாலும்
மனசருகில் மருகி நிற்கும்
மரப்பாச்சி வாசம்
நிர்வாணமாய்!

புதன், 26 ஜனவரி, 2011


"ஏன்டா இப்போவெல்லாம் எழுதுறதே இல்லை?" என்கிற நிறைய ஆதங்கமான(!) கேள்விகளுக்கு எத்தனை மொக்கை காரணங்கள் சொன்னாலும் உண்மை வேறாய் இருக்கிறது.."தினமும் ரெண்டு பக்கமாணும் எழுதியே ஆவணும்"என்கிற வயித்து வலியோ அல்லது "தெனமும் படுக்கறதுக்கு முன்னாடி ரெண்டு கவிதையேனும் எழுதாட்டி இந்த ஜென்மம் எடுத்ததுக்கு பலனே இல்லையாக்கும்"என்கிற திருகு வலியோ இல்லாமல் படுத்தவுடன் நிம்மதியாய் தூங்க முடிகிறது!

இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு நம் தொலைக்காட்சிகள் வழங்கிய எந்த குப்பையும் பொறுக்கி தின்னாமல் அணிவகுப்பு மட்டும் பார்க்கையில் ஒரு கேவலம் ....வங்காள நடை மேடை வந்த போது மம்தா வையும் பிரணாப் முகர்ஜி யையும் க்ளோசப்பில் காண்பித்த காமிரா கேரளா நடை மேடை வந்த போது காண்பித்த திருமுகம் யாருடையது தெரியுமா?....வீரப்ப மொய்லி !! கருப்பாய் குள்ளமாய் மீசை வைத்திருப்பவன் எல்லாம் மதராசி ...தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் என நான்கு மொழிகளும் நான்கு வேவ் வேறு இனங்களால் பேசப்படும் மொழி என்றோ அவை தனி தன்மை உடையவை என்கிற கவனமோ இன்றி நீங்கள் எல்லாருமே மதராசி என்கிற ஒரு அசட்டு மேம்போக்கான திமிர் இங்கு எல்லோருக்குமே உண்டு..வேண்டுமானால் ஒரு சவால் விட்டு பாருங்களேன் உங்கள் அலுவலகத்தில் அல்லது சக வடநாட்டு நண்பர்களிடத்தில் ..ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அதிலிருக்கிற நான்கு தென்னிந்திய மொழிகளையும் மிகச்சரியாய் இனம் கண்டு கொண்டால் அந்த நோட்டை எடுத்துக்கொள்ளலாம் என..எத்தனை பேர் கிழிக்கிறான் என்று பாருங்கள்!! இந்த விஷயத்தில் படித்தவன், மேல்தட்டு என்று ஒரு வித்தியாசமும் கிடையாது!! நல்லதாய்போயிற்று தமிழ் நாட்டிலிருந்து ஒரு பல்லக்கும் வரவில்லை..நமக்கு மூத்த தமிழறிஞர் (!) குடும்பத்துக்கு பல்லக்கு தூக்கவே ( நாகரீகம் கருதி "குண்டி நக்க" என்று எழுதவில்லை!)நேரம் போதவில்லையே! அப்படியே கொஞ்ச நஞ்சம் நேரம் கிடைத்தாலும் தமன்னா மேடம்s கார்த்தி சார் தனுஷ் சார் உலக நாயகன் சார் இளைஞன் சார்..களின் அறிவாடல் களின் பகிர்தலில் திளைத்து விடுகிறதை தவிர்க்க முடிகிறதா?!

01/2/11

கிரண் ராவ் இயக்கிய DHOBI GHAAT படம் இரவு பார்த்தோம் ...நம்ப முடியவில்லை..அதி அற்புதமான ஒரு சினிமா அனுபவம்..கசாட்டா ஐஸ் க்ரீம் என்று பாமரத்தனமாக ஒப்பிடலாம் நான்கு பேரின் வாழ்கையின் ஒரு slice .... மிக நேர்த்தியாய் அதே சமயத்தில் மிக நேர்மையாய் எடுக்கப்படிருக்கிற ஒரு படம்..கதை உத்தி இந்திய சினிமாவுக்கு புதிது..அதிலும் என்னை அதிகம் ஈர்த்தது பாத்திர தேர்வு.. நான்கே நான்குமுக்கிய பாத்திரங்கள் .. நான்கு மனிதர்களின் வாழ்வியல் உள்நோக்கு ..இடையூடாக வந்து போகும் மூன்று சிறு பாத்திரங்கள் ...அவர்களுக்கும் ஒரு முக்கியத்துவம் கொடுத்து பார்வையாளனின் மனதில் நிறுத்துதல் என அதி அற்புதமான ஒரு திரைக்கதை.. .ஒரு கேரைக்டரை எவ்வளவு நுணுக்கமாய் அவதானித்து உள்வாங்கி அதில் ஒரு நடிகனின் திறமையையும் கலந்து துல்லியமாய் வெளிக்கொணர்வதில் ஆமிர், டென்சில் வாஷிங்டன், சியான்பென்ன் , டோம் ஹான்க்ஸ் ஆகியோரின் ஒரு இந்திய வார்ப்பு ... சொல்லமுடியும்..என் முந்தைய பதிவான "அபியும் நானும் " எழுதுகையில் நான் முறையிட்ட என் ஆதங்கம் இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது !! அதி அற்புத ஆற்றல் கொன்ட நாயக நாயகிகள் அன்றி சக மனிதர்களின் வாழ்கையை விவரிக்கும் படம் எப்போது வாய்க்கும் என்ற கேள்விக்கு பதில் இந்த படத்தில் காண கிடைத்தது! படம் பார்க்க வருபவனின் அறிவு அளவை ஏற்கனவே தீர்மானித்து அவனுக்கு அவசியம் புரியவைத்தே(!) தீர்வதாய் கங்கணம் கட்டிக்கொண்டு நம் கலை ஞானிகளும், இயக்குனர் சிகரங்களும், ஷங்கர் சார்களும், "மணி" மாமாக்களும் பிரம்ம பிரயர்த்தனம் செய்து தீட்டிய காவியங்கள் போல் அல்லது எந்த ஒரு சால்ஜாப்பும் சப்பைகட்டும் ( ஒத்தலா பஜனையும் என்று படிக்கவும்!) இல்லாமல்பார்வையாளனை , அவன் ரசனை திறனை மதித்து மேம் படுத்தும் விதமாய் எடுக்கப்பட்டிருக்கிற ஒரு படம்...மீண்டும் ஆமிர் பற்றி சொல்லத்தான் வேண்டி இருக்கிறது ...ஆமிருக்கு கண்களில் எப்போதும் ஒரு நக்கல்... கேலி ததும்பும் பார்வை நிரந்தரமாய் இருக்கும் இது பெரும்பாலும் எல்லா படங்களிலும் காணக்கிடைக்கும்...கடைசி வார்த்தைக்கு பின் லேசாய் இழுத்து பேசுவதும் பழக்கம்..இந்த படத்தில் இவற்றை மொத்தமாய் அழித்துவிட்டு ஒரு அறிவுஜீவி ஓவியனாய் தன் விருப்பத்துக்கு ஏற்றவாறு வாழ்கையை நிர்ணயித்து அதன் போக்கில் வாழும் ஒரு மிக மென்உணர்வுகொண்ட , கண்களில் சதா ஒரு தேடலும் உதட்டில் கிங்க்ஸ் புகைய வளைய வரும் கலைஞ்சனாய் ஆமிரின் உடல் மொழி முற்றிலும் வேறானது..இந்த தோல் உரித்து தோல் மாற்றும் வித்தை தான் ஒரு நடிகனுக்கு அவசியம் நிகழ வேண்டிய ஒரு பரிணாம வளர்ச்சி.. இது ஆமிருக்கு கைகூடியிருக்கிறது..இங்கு ஐம்பது வருடங்களாய் கலைத்தாயின் முலைகளுக்கு அருகே தூக்கி குடியிருத்தப்பட்டிருக்கும் நம்ம ஊர் ஆஸ்கார் அவதார, உலகநாயன் மார்களுக்கு இந்த பரிணாம வளர்ச்சி எப்போது நிகழப்பெரும் என மாபெரும் எதிர்பார்ப்பு ஒன்று எப்போதும் எனக்கு உண்டு..கூடவே இவர்களை தலையில் தூக்கி வைத்து இறங்கவிடாமல் படுத்தும் நம் ரசிக மா மணிகளின் மேலான ஒரு பரிதாபமும் கூடவே உண்டு...இந்த படம் பார்த்து வெளியே வருகையில் என் பதினைந்து வயது மகள் சொன்ன வார்த்தைகள்.."அப்பா முதன் முதலா ஒரு நல்ல உருப்படியான இண்டர்நேஷனல் படம் இந்தியன் லாங்குவேஜ்ல வந்திருக்கேன்னு திருப்தியா இருக்குப்பா !"..அவள் சமீபத்தில் பார்த்து ரசித்த படம் 2003 இல் வெளிவந்து சிறந்த படத்துக்கான golden lion விருதும் வெனிஸ் பட விழாவில் சிறந்த முதல் படத்துக்கான விருதும் வென்ற Andrey Zvyagintsev இயக்கத்தில் வெளியான THE RETURN என்கிற ரஷ்ய படம்!!

ஒன்று புரிகிறது... நாற்றாங்கால்கள் வளமாய் இருப்பின் விளைச்சல் நிச்சயம் வளமாய் இருக்கும்!!

செவ்வாய், 18 ஜனவரி, 2011
மெல்லிய குறுந்தகடில் இருந்து
வெளி வந்து புரிந்த
தூரதேசத்து
ஆண்கள் பெண்களின்
நீண்ட கலவிகளில்
கலந்திருந்தேன்
கௌரவ விருந்தினராக
இரு வெள்ளைப் பெண்களும்
ஒரு கருப்பு இளைஞனும்
உச்சத்தை நெருங்கிய கணத்தில்
சட்டென மறைந்தனர்
மின்சார வெட்டில்
காற்றில் கரைந்திருந்த
கலவிகளின் ஒலிகளுடனும்
கனவுகளில் மிதந்த
கலவிகளின் நினைவுகளுடனும்
நிகழ்ந்து முடிகிறது
தவறவிட்டுவிட்ட
ஒரு தனிமையின் உச்சம்!

"கோ நா" என்கிற யாரோ ஒருவர் எழுதி போன வார விகடனில் வெளிவந்த கவிதை இது!
சந்தோஷமாய் இருக்கிறது... விகடனில் இது போன்ற கவிதை வெளிவந்ததில்! நீலப்படம் பார்த்தல் அதன்பின் சுய இன்ப அனுபவங்கள் என அதிகம் பேச பயந்த நம் வெகுஜன பாச்சாண்டி ஊடகங்கள் சற்றே தெளிந்திருக்கின்றன போலும்!!
எனினும் "we are indians we don't talk sex!" என்கிற மனோபாவம் இன்னும் பெரும்பான்மையாகவே இருக்கிறது!
இந்த வருட என் calander வெளிவந்து விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சில வாடிக்கையாளர்கள் தில்லியில் இருந்தும் திருப்பூரில் இருந்தும் " என்ன சார் இதை எப்பிடி ஆபீசில் வைக்கறது..சங்கடமாய் இருக்குமே.."என்று நெளிந்தார்கள். இது சங்கடமா அல்லது தர்ம சங்கடமா என்பது அவரவர் பிரச்சினை! ஆனால் அவர்கள் தனிமையில் இரண்டு முறையேனும் பிரித்து மேய்ந்ததை ஒத்துக்கொண்டார்கள்!
நம்மவர்க்கு காமத்துக்கும் நிர்வாணத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை..நிர்வாணம் அழகியல் சம்பந்தப்பட்டது என்கிற தெளிவே இன்னும் வந்த பாடில்லை!!
முக்காடு போட்டு மூடி வைத்த பெண்ணுடலை சந்தர்ப்பம் கிடைக்கையில் பிரித்து மேய்வது என்கிற வகையில்தான் நிர்வாணம் காமப்படுத்தப்பட்டிருக்கிறது இங்கே! இது இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு பின்னர் தோன்றிய மனோபாவமாய் இருக்கலாம் என தோன்றுகிறது..
முலைப் பிளவும் தொப்புள் குழியும் பிருஷ்ட மேடுகளும் தான் பெண்ணுடல் பற்றிய அறிவாய் நம் சினிமாவும் சினிமா பாடல்களும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் நமக்கு திணிக்கின்றன..அழகியல் குறித்தும் மென் ரசனை குறித்தும் நமக்கு இன்னும் ஒரு விழிப்புணர்வு வரவில்லை என்றே நினைக்கிறேன் நான். இதை யார் சொல்லிக்கொடுப்பார்கள் எது இப்போ ரொம்ப அவசியமா என்றெல்லாம் கேள்வி வரலாம்..இது தான் சரியான சந்தர்ப்பம் என ஒத்த சிந்தனை உள்ளவர்கள் ஒத்துக்கொள்வார்கள்! காமமும் அழகுதான்..ஆனால் vulgarity - sensuality க்கும் வித்தியாசம் தெரியாமல் நாம்தடம் மாறி அதை சரி என்று சால்ஜாப்பும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்! அதனால் தான் பகலில், அலுவலகத்தில் ஒரு நெறியும் வார இறுதி இரவுகளில் வேறு நெறியும் என்றும் உள்ளூரில் ஒரு பிம்பம் வெளி ஊர் அல்லது வெளி நாடு சென்றால் வேறொரு பிம்பமுமாய் நம் பேராண்மையை கட்டிக் காத்துக்கொண்டிருக்கிறோம்!!
நிர்வாணம் அழகு ..உடலும் மனமும் நிர்வாணமாய் இருக்கையில் அதற்கு ஒரு தனி அழகு அமைகிறது ..அதை இனம் காணவும் ரசிக்கவும் ஒரு பக்குவப்பட்ட மனநிலை அவசியம்.. முயன்று பாருங்களேன்..கை கூடும்!!ஞாயிறு, 12 ஜூலை, 2009

நானும் அபியும்


.... ஒரு பிள்ளை.. அதுவும் பெண்பிள்ளையாய் இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் ...வீடே கோலாகலமாய் தான் இருக்கும் ,பண்டிகை அல்லாத நாட்களிலும்..வேண்டி விரும்பி பெற்ற பெண் குழந்தையை பார்த்து பார்த்து வளர்த்து ..பிறந்த மறுநாள் லாவகமாய் நகம் வெட்டி (இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் என் பொக்கிஷங்களில் ஒன்று !) பின் ..."அப்பா ஆயிடுச்சி ..கழுவி விடு "..க்கு காத்திருந்து கழுவி விட்டு .. குளிப்பாட்டி...நெஞ்சில் தூங்க வைத்து.. அவளின் ஒவ்வொரு "அப்பா ப்ளீஸ் ப்பா.." வுக்கும் பெண்டாட்டியிடம் வாதாடி சண்டையிட்டு ,வாங்கி கட்டிக்கொண்டாலும் ...நெஞ்சு நிமிர்த்தி சந்தோஷப்பட்டு.. ஒண்ணாம் கிளாஸ் முதல் இன்றைய ஏழாம் கிளாஸ் வரை கூடவே பயணப்படுவதில் நான் மறுபடியும் திருந்தி வளர்ந்து ....இன்றைக்கு நல்ல சானிடரி நாப்கின் முதல் புஷ்ஷின் மேல் எறியப்பட்ட ஷூவின் பின்னணியில் பொதிந்திருக்கும் அடக்கிவைக்கப்பட்ட ஆற்றாமையின் நியாயம் வரை சரிக்கு சரியாய் வாதிட முடிகிற மகளுக்கு தகப்பனாய் இருக்கிற பெருமை அலாதி சுகம்.. இந்த தருணத்தில் தான் திருட்டு வி சி டி யில் "அபியும் நானும் " படம் பார்க்க நேர்ந்தது ..அட ,நம்ம வீட்டு கதை ...
draft
1/9/08
இதை எழுதி ஏறக்குறைய பத்து மாதங்கள் ஆயிற்று (ஒரு பிரசவ காலம் !) மகளும் எட்டாம் வகுப்புக்கு வந்தாயிற்று..ஆனாலும் மகளின் இந்த ஒருவருட வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது ..ஒபாமா பதவி ஏற்று,எகானமி மெல்ட் டவுன் முகத்தில் அறைந்து,புலிகள் அழிக்கப்பட்டு, பிரபாகரன் இறந்ததாய் சொல்லப்பட்டு ...என்று ஏதேதோ நிகழ்ந்து ஆயிற்று ... வேலை விஷயமாய் மும்பை போயிருந்த சமயம் ஒரு மாலை ஆறு மணிக்கு மனைவியின் போன் ..."நீங்க கேளுங்கப்பா..." என்று ஆரம்பித்தது ...மகளுக்கு ஷிம்மிஸ் வாங்க கடைக்கு போன இடத்தில் அம்மைக்கும் மகளுக்கும் பிணக்கு!ஸ்போர்ட்ஸ் பிரா வேண்டுமென்று மகளும் இப்பவே அவசியமா என்று அம்மையும் சற்றேறக்குறைய சண்டை ...

முடிவாக, "நீங்க கேளுங்கப்பா..."!மகளுக்கு முதல் பிரா வாங்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற தகப்பன்கள் பாக்கிய சாலிகள்! "அப்பா...ஒன்னுமில்லப்பா.. " என்று மருகி சிணுங்கிய பிள்ளைக்கு தெளிவாய் மார்பளவுக்கும் பிரா அளவுக்கும் வித்தியாசம் தெரியப்படுத்தி உள்ளாடைகள் எப்பவும் சௌகரியமாய் இருக்கவேண்டிய அவசியத்தையும் உணர்த்தி "நா எந்த ஸ்போர்ட்ஸ் பிராவை கண்டேன் " என்ற மனைவியையும் சமாதானப் படுத்தி வாங்க வைத்த தருணம் உன்னதமானது! (அன்று பாரில் கூடுதலாக "ஒரு லார்ஜ்" கொண்டாடப்பட்டது உபரி தகவல்!)

சரி, படத்துக்கு வருவோம்..நல்ல படம்.. மகளுக்கும் தகப்பனுக்குமான உறவை கவிதையாய் சொல்ல முயற்சித்த படம்.. (கூத்துப்பட்டறையில் பசுபதி, கலைராணி யோடு பரிச்சயமானபோது குமார வேலுவுடனும் "ஒட்டு தம்" அடித்த நினைவுகளில் என் பிளாஷ் பேக்) பயித்தியமாய் குமாரவேலு வந்து அடுத்த நிலைக்கு துள்ளிஏறிய படம் ,"சர்தார்" வந்ததும் கொஞ்சம் சொதப்பலாயிற்று... அதிலும் சர்தாரை சுற்றியுள்ள எல்லோருக்கும் ஒரு நெஞ்சை நக்கும் பிளாஷ் பேக் என நொண்டி அடிக்க வேண்டிய கட்டாயம் ஏன்?சூப்பர் ஹீரோ மனநிலையிலிருந்து நாம் எப்போ விடுபட போகிறோம்? எல்லா கதைக்கும் ஏன் ஒரு நாயகனோ/ நாயகியோ கட்டாயமாகிறார்கள்? அவர்களை சராசரி மனிதர்களிடமிருந்து பிடுங்கி எங்கோ உச்சத்தில் கொண்டு ஏன் செருகுகிறோம்? என்றெல்லாம் கேள்விகள் முளைக்கலாயின.. சராசரி வாழ்க்கைக்கான நிஜ விமர்சனம் கொண்ட படங்களை நாம் தேட வேண்டிய கட்டாயம் இப்போது..

இந்த பத்து மாத இடைவெளியில் சுப்ரமணியபுரம், பூ, வெண்ணிலா கபடிகுழு, என படங்கள் வந்து ஒரு நம்பிக்கை தோய்ந்த சந்தோஷத்தை கொடுத்தது உண்மை!!ஆனால் கூடவே "தசாவதார "பெருவியாதிகள் எப்போது தீரும் என்கிற ஆதங்கமும்! ""அள்ளி அள்ளி கொடுத்தேனே காந்தா?""!!

செவ்வாய், 30 டிசம்பர், 2008

கர்மேன்...கர்மேன்ன்


பெரும்பாலும் பெயர்கள் நினைவிருப்பதில்லை ...மிக நெருங்கின வட்டம் தவிர. முகமும் குரலும் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.... நினைவடுக்குகளில் இருந்து உருவும்போது. இதெல்லாவற்றையும் விட முன் நிற்பது நிறமும்,வாசமும் விரல்களுமே..பெயரை கேட்டதும் விரல்கள் படம் விரிக்கும் ..பின் முகம் தொடரும். அதென்னவோ கை அசைவுகளையும் கால்களையும் கவனித்தல் சிறு வயதிலிருந்தே பழக்கமாகி விட்டது. இடங்களைகூட இப்படித்தான் நினவு படுத்த முடிகிறது..நிறங்களும் வாசமுமாய்.

முதல்நாள் அழுதபடி பள்ளிக்கு சென்று நாள் முழுதும் அழுது வாந்தி எடுத்து தலை சாய்த்து உறங்கின சிஸ்டர் கஸ்பாரின் மடி வாசம், ஒண்ணாம் கிளாஸ் லோகு டீச்சரின் வழுவழுத்த கருப்பு நிறம், ரெண்டாம் கிளாஸ் ஜெயஸ்ரீ டீச்சரின் நளினமான மெல்லிய, பூ கட்டும் கனகாம்பர விரல்கள்.. பழைய தோழி ராதாவின் தேனில் நனைந்த இஞ்சி குரல், இப்போதான் தெளித்து கோலம் போட்டதுபோல எப்பவும் பளிச்சென துலங்கும் முகம் கொண்ட பத்மாசினியின் (என் முதல் முத்த) வாய் வாசம் ......இப்படி தனி தனியே என் நினைவடுக்குகளில் உறைந்த பெயர்களை தாண்டி...
முகமும், நிறமும், குரலும், விரல்களும்,காலசைவுகளும்,ஏன் வாசமுமாய் கூட நினைவிலிருக்கும் ஒரு பெயர் "கார்மென்"!

சிங்கிஸ் ஐத்மாத்தவ் இன் 'ஜமீலா',ல. ச. ரா வின் 'அபிதா' ...தி ஜா வின் மரப்பசு 'அம்மிணி',மோகமுள் 'கல்பனா' போன்ற திட சித்தம் கொண்டு என்னை மொத்தமாய் அலைகழித்த பெயர் "கார்மென் "

Georges Bizet இன் மிக பிரபலமான French Opera -"Carmen". இன்றளவும் மிகவும் அதிகம் விரும்பி மேடையேற்றப்படும் ஒபேரா -Prosper Merimee இன் நாவலான கார்மென் ஒபேரா வடிவம் எடுத்து 1875 இல் முதல்மேடையேற்றத்தில் "ஒழுக்கங்கெட்ட "ஒபேரா என நிந்திக்கப்பட்டு பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. Bizet உயிரோடிருந்த வரை ஒடுக்கப்பட்ட கார்மென், இன்றைய தேதிக்கு எல்லாராலும் மிகவும் விரும்பப்படுகிற ஒபேரா வாக நிலைத்துவிட்டிருக்கிறது ...கல்லடி வாங்கி பின் காலத்தை வென்று நிலைத்தல் என்பது நல்ல படைப்புக்கு ஒரு நியமம் என்று ஆகி விட்டிருக்கிறது !! நாளடைவில் 1915,1945,1985...என பல வருடங்களில் கார்மென் சினிமா வாக உருப்பெற்று வெளிவந்திருக்கிறது.. 1985 இல் Francesco Rosi யின் direction இல் வெளிவந்த 'கார்மென் ' என்னை சந்தித்தது பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ..

1990 இல் சண்டிகரில் நடந்த பிரெஞ்சு பட விழா வில் முதன்முறையாக 'கார்மென்' ஐ சந்தித்தேன்.. அன்றிரவு..மற்றும் அடுத்தடுத்த இரவுகளில் தூக்கம் தொலைத்து 'கார்மென்' ஐ காதலிக்கத் தொடங்கிவிட்டிருந்தேன் என்னை அறியாமலே..அதன் பின் எங்கு எப்போது வாய்ப்பு கிட்டினாலும் .."கார்மென்..கார்மென்"..!

பிரபல ஒபேரா பாடகரான பிளாசிடோ டோமிங்கோ ( Placido Domingo) கதாநாயகனாகவும் , ஜுலியா மிகேநேஸ் ( Julia Migenes) கதாநாயகியாகவும் நடிக்க ஒரு அற்புதமான அனுபவம்..ஜுலியா ஒரு அனுபவப்பட்ட ஒபேரா பாடகியும் தேர்ந்த ஜிப்சி(flemenco) நடனக்காரியும் என்பது பிறகு தெரியவந்தாலும் அந்த முதல் அனுபவத்தில் நான் மயங்கித்தான் போனேன் ..ஒரு மிகப்பிரபலமான கதா பாத்திரத்தை அதன் முழு வீரியத்தையும் ஆகிருதியையும் உள்வாங்கி தன்னிலைப்படுத்தி பின் முழு வீச்சுடன் அடுத்த நிலைக்கு கொண்டு சேர்த்தல் என்பது அத்தனை எளிதல்ல ...அந்த எள்ளலும் துள்ளலும் கட்டுக்கடங்கா பெண்மையையும் நளினம் தோய்த்து இதைவிட வெளிப்படுத்த முடியுமா யாராலும்?

விழிகளின் பரிகசிப்பை விரல்களில் கொண்டுவருதல் எத்தனை பேருக்கு வசப்பட்டிருக்கிற வித்தை??

கார்மென்இன் குறுக்கு சிரிப்பும் நக்கலும் ,ஆளுமையை அடக்கி அளவெடுக்கும் ஊடுருவும் பார்வையையும் அத்தனை எளிதில் தாண்டி விடக்கூடியதா?

இந்த கண்ணிகளை திறந்து பாருங்கள் ...கார்மென் இன் காதல் உங்களுக்கும் வசப்படும்....!

கடைசி காட்சியில் ..கறுப்பு - சிவப்பு ...உள்ளே - வெளியே ...நாயகன் - வில்லன் .வேடுவன்-மிருகம் ....வேட்டையாடும் மிருகம்....என ஒரு குறியீட்டு வன்மத்துடன் படம் முடிகையில் ....உங்கள் கண் விளிம்பில் ஒரு சிறு அசௌகரியம்.. உணர முடியுமேயானால் ...அது கார்மேன்னுக்கான காதலன்றி வேறென்ன?

khttp://in.youtube.com/watch?v=EYfU4QPwz-4


http://in.youtube.com/watch?v=ljv0zDATu3c


http://in.youtube.com/watch?v=djsuP0uta7s


http://in.youtube.com/watch?v=Pr7CpjKhrxY


http://in.youtube.com/watch?v=7fL3HtDWO3g


திறக்க வில்லையெனில் ..orkut இல் my favoruite video வில் இணைத்துள்ளேன் .. கீழ் இருந்து மேல் வரவும்.