சனி, 20 டிசம்பர், 2008

"நோ தங்கமணி ...என்ஜாய்"

ஆயிற்று...இன்று அதி காலை மகளையும் மறுபாதியையும் நெல்லைக்கு ரயிலேற்றிவிட்டு பிளாட்பாரத்தில் துள்ளலும் துடிப்புமாய் ஓடி வந்து காருக்குள் உட்கார்ந்து பெருமூச்சு விட்டதும் மனது லேசாய் நக்கிக்கொண்டது "இந்தா பதினைந்து நாள் விடுதலை உனக்கு" ! டில்லியின் ரசிக்கக்கூடிய இந்த குளிரில் கார் கண்ணாடியை லேசாய் இறக்கிவிட்டபடி காலைப்பனியின் சில்லிப்பை நுகர்ந்தபடியே இண்டியா கேட் வழியாய் வீடு வந்து வழக்கம்போல் டீ குடித்து பேப்பர் படித்து குளித்து கிளம்பி அலுவலகம் போய் ராத்திரி எட்டு மணிக்கு வீடு வந்து காலிங் பெல்லை அழுத்தி விட்டு நிற்கும்போது தான் உரைத்தது!
அடப்பாவி .."நோ தங்கமணி..என்ஜாய்....".
இதோ..வோட்காவும்.. பிஸ்தாவுமாய் இரண்டுலார்ஜ் இறக்கியபடியே எழுதத் துணிந்தாயிற்று !! வீட்டில் தனியே இருக்கும் சுதந்திரம் அலாதி அனுபவம் தான்..எதையும் கழற்றி எங்கேயும் வீசலாம் ..ஷூ வோடே காலைத்தூக்கி சென்டெர் டேபிளில் வைத்த மேனிக்கு ஹாலில் பேப்பர் படிக்கலாம்..முகத்தை அஷ்ட கோணலாக வைத்தபடி முதுகு சொறியலாம்.. பூட்டி வைத்திருந்த XXX சமாச்சாரங்களை தூசி தட்டி "பார்க்கலாம் "..and can blissfully fart wherever and whenever basis..அம்மணமாய் திரியலாம் ..ஆதி மனிதனாய் உணரலாம்!!
குடும்ப வாழ்க்கை என்கிற இந்த சர்க்கஸில் இப்படி ஒரு இடைவெளி மிகவும் அவசியமானது ஆரோக்கியமானதும் என்றே தோன்றுகிறது ..இருவருக்குமே!
மூன்று லார்ஜ் தரும் தெளிவான போதை ஒரு சுகானுபவம் ...தலைக்கு மேல் ஒரு சின்ன ஒளிவட்டமும் லேசான இரண்டு கொம்புகளும் ,முதுகில் துளிர்விட்ட இரண்டு இறக்கைகளும் கூடவே ஒரு குறும்பான vaal முளைத்தது போன்ற ஒருஉணர்வு கிட்டும் இந்த போதை ஒரு கிறக்கம்...சரி என் சுதந்திரத்துக்கு வருவோம் ..சேச்சி கடையிலிருந்து "மூணு பரோட்டேயும் எறச்சி கறியும்" தருவித்தாயிற்று! ரொம்ப நாட்களுக்கு முன் வாங்கி வைத்திருந்த "irreversible" DVD பார்த்துவிடலாம்.. ஆனால் எல்லாம் இருந்தும் இந்த சனிக்கிழமை இரவு அந்நியமாய் தோன்றுகிறது ..தனிமை கழுத்துக்கு பின்னாலிருந்து லேசாய் எட்டிப்பார்க்கத் துவங்கிவிட்டது .....
சில வருடங்கள்முன்பு எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்தில் பொருந்துகிறது ..

தனிமை மிகவும்
அற்புத மானதென நண்பன் சொல்லுவான்
காதலிக்கு கடிதம் எழுத
கம்ப்யூட்டர் அல்லது கம்யூனிச
புத்தகங்கள் வாசிக்க
வாஸ்து சாஸ்திரம் அல்லது
வான்வெளி ஆராய்ச்சி கற்க
சைகொவேச்கியின் nut craker கேட்க
பைபிள் அல்லது பழைய புத்தகங்கள் தேடி துசி தட்ட
த்யானம் செய்ய
தண்ணியடிக்க
கால் நகங்கள் அல்லது கக்கத்து மயிர் களைய
கஞ்சா முயன்றபடி gazal கேட்க
டாலியின் உருகும் கடிகாரங்களில்
அல்லது வாடி உதிரும் வான் கோ வின்
சூரியகாந்தி யில் தொலைய ...
பிராணாயாமம் கற்க
சிகரெட் புகையின் அதிர்வெண் கணக்கிட
மஞ்சளும் நீலமுமாய்
பழுப்பேறிய பழைய கடிதங்களில்
உறைந்திருக்கும் காதலை நுகர ...
மனைவியின் இடுப்பு மடிப்பிடை உருளும்
ஒற்றை வியர்வைத் துளியின்
ருசியை அசை போட ...
இவையன்றி இதுபோல் இன்னும்
என்ன என்னவெல்லாமோ செய்ய வென ..
அது சரி..
இந்த தனிமையை வைத்துக்கொண்டு
நான் தனியாய் என்ன செய்ய?..

சனிக்கிழமை நள்ளிரவுகளில் வீடதிர ஒலிக்கும் மனைவியின் வெடிச் சிரிப்பும் மகளின் நையாண்டி கலாட்டாக்களும் இல்லாமல் இந்த கம்ப்யூட்டர் கீ போர்டு சத்தத்தில் நைந்து உறைகிறது இவ்விரவு ....

மயான அமைதியாய் இருக்கும் இந்த தனிமையை வைத்துக்கொண்டு தனியாய் நான் என்னதான் செய்வது???

2 கருத்துகள்:

 1. சுரேஷ், நலம்தானே,,,
  தனிமை ஒரு வித்யாசமான ருசி. சில நேரங்களில் தனிமை விருப்பபட்டவரிகளின் கூட இருப்பதாக கூட இருக்கலாம். தனிமை என்பது தனியாக இருப்பது மட்டுமல்ல. தனிமையை சுவாசிக்க முக்கிய தேவை, நமக்கு பிடித்ததெல்லாம் கூட இருக்க வேண்டும். அப்போதுதான் தனிமை சாத்தியமாகிறது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள் தனிமையை வைத்துக்கொண்டு தனியாக என்ன செய்ய என்று...
  தனிமை பற்றிய என் குறுங்கவிதை ஒன்று..

  "நின்று கொண்டிருக்கிறேன்
  என்னுடன் நான்
  தனிமையில்"

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு...த்னிமையின் இனிமை, அதே சமயம் வெறுமை..கவிதை மிகவும் அருமை சுரேஷ்..

  பதிலளிநீக்கு