வெள்ளி, 18 மார்ச், 2011


ரெண்டாங்க்ளாஸ்
டீச்சர் பையன் என்கிற
அங்கீகாரத்தால்
எப்போது நினைத்தாலும்
எந்திரிக்க முடிந்தது
ஒன்னுக்கு
போகவென...எனினும்
வாய்ப்பாடு தள்ளாடுகையில்
முன்னங்கால்களை முத்தமிட்டது
முற்றத்து ஈசி சேர் உருளை..
ஆறாவது 'டி ' சார் மகனென
அறியப்பட்டதில் கிடைத்தவை
கிளி கொத்தாத வாதாம்
பழங்கள் மற்றும்
சேமியா ஐஸ் ...
கசகசா,கமர்கட்
கண்டிப்பான எதிர்
அணியாயினும்
எப்போதேனும் வாய்க்கும்
டவுசர் ஜேபியில்
ரகசியமாய்....எனினும்
வாத்தியார் மகனாய்
இழந்தது அதிகம்
வாழ்ந்ததை காட்டிலும் ...
கடலூர் தாண்டி
தீபா புருஷன் என தில்லியில்
எல்லைகள்
வகுக்கப்பட்டு கழுத்தில் மணி
கட்டிய சேவலாய்
கொக்கரிப்புகள் என்னவோ
ஏராளம் தான்!
இதனிடையே பிராயத்தில் இருக்கும்
ஒற்றை மகளின்
அப்பனாய் அவ்விதிகளுக்கு உட்பட்டு
"e " மெயில் facebook .. இத்யாதிகளில்
"அடக்கி வாசிக்க "
அறிவுறுத்தப்பட்டு
எப்படியேனும் எனக்கான நாளையை
அல்பச்சினோ, அபிதா பர்வீன்
அல்லது வண்ணதாசனின்
வீச்சில் வரையறுக்க முயல்கையில்
முதுகு தொட்டு
திரும்ப வைக்கும்
தண்ணி.. தம்.. தொடாத
நண்பனின் மாரடைப்பு ...
பெற்றதும் இழந்த வற்றுக்குமான
சமன்பாடுகள் கேள்விக்குறிகளாய்
எப்போதும் போல் !!

1 கருத்து:

  1. தீபா புருஷா , கலங்காதே இதுதான் வாழ்க்கை. கழுத்தில் லைசன்ஸ் பாதுகாப்புதான் மச்சான், யாரும் அள்ளிட்டுப்போக மாட்டாங்க நம்மை

    பதிலளிநீக்கு